சிறிய சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி உற்சாக கொண்டாட்டம்


சிறிய சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2020 4:30 AM IST (Updated: 23 Aug 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடை காரணமாக மக்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடினர்.

புதுச்சேரி,

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி பொது வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் இருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுமாறு அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, பொதுமக்கள் நேற்று வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடினர். தங்கள் வசதிக்கு ஏற்ற விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்து மனமுருக வேண்டி வழிபட்டனர். கொழுக்கட்டை, எள் உருண்டை, சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களை படையலிட்டு விநாயகரை வழிபட்டனர். பின்னர் அந்த பிரசாதங்களை அக்கம், பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் காலை 8 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி வழங்கி கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். கோவிலில் அர்ச்சனை போன்றவை ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் மட்டும் நடந்தது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்படும். ஆனால் இந்த முறை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாடு காரணமாக பிரசாதம் எதுவும் வழங்கப்படவில்லை. கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

புதுச்சேரியில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் தனியார் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் அவ்வை திடலில் விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தது. அந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் வழிபட்டுச் சென்றனர்.

ஓரிரு இடங்களில் வீடுகளுக்கு முன்பாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பல பகுதிகளில் பக்தர்களுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அரச மரத்தடியில் உள்ள விநாயகர் சிலைகளை மக்கள் குடும்பம், குடும்பமாக தேடிச்சென்று வழிபட்டதையும் பார்க்க முடிந்தது.

நகரில் உள்ள சிறிய விநாயகர் கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் தடுப்புக்கு வெளியே நின்று விநாயகரை தரிசித்துச் சென்றனர். இதுபோல பல விநாயகர் கோவில் களில் நேற்று வழிபாடு நடந்தது.

விநாயகர் சதுர்த்தி என்றாலும் நேற்று பிற்பகல் வரை நகரின் பல இடங்களில் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடந்தது. கடை வீதிகளிலும் ஓரளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது. இருந்தபோதிலும் கூடியிருந்த மக்களை போலீசார் அவ்வப்போது எச்சரித்தனர்.

பாரதீய ஜனதா இளைஞர் அணி சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரி பின்புறம் செஞ்சி சாலையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்து அங்கிருந்து நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே பாரதீய ஜனதா கட்சியினர் விநாயகர் சிலையை குருசுக்குப்பம் பகுதியில் கடலில் கரைத்தனர்.

இதேபோல் லாஸ்பேட்டை பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் இளைஞர் அணி பொதுச்செயலாளர் வேல் முருகன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சாமிநாதன் எம்.எல்.ஏ., தொகுதி தலைவர் சோமசுந்தரம், நிர்வாகிகள் பாலாஜி, ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story