சிறிய சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் - வேலூர் மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது


சிறிய சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் - வேலூர் மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது
x
தினத்தந்தி 23 Aug 2020 4:30 AM IST (Updated: 23 Aug 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபட்டனர்.

வேலூர்,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். பின்னர் போலீசார் அனுமதி அளிக்கும் நாளில் ஊர்வலமாக சிலைகளை கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கும், அதனை ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று காணப்படும் உற்சாகம் இந்த ஆண்டு காணப்படவில்லை. விழாவையொட்டி பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலையே பூஜை பொருட்கள் மற்றும் விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர்.

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

வேலூர் லாங்கு பஜாரில் பூஜை பொருட்கள் வாங்க நேற்று காலையும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் விநாயகர் சிலைகள், பூஜைக்கு தேவையான பூ, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்றனர். சாலையோரம் பல்வேறு இடங்களில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கினர்.

வேலூர் சத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டின் முன்பு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதை தடுக்க மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் போலீசார் வாகனங்களில் ஒவ்வொரு பகுதியாக ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. தோட்டப்பாளையம் காட்பாடி சாலையில் உள்ள செல்வகணபதி கோவிலில் உற்சவருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தாண்டவ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசமும் அணிவிக்கப்பட்டது.

அதேபோன்று காகிதப்பட்டறை விநாயகர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம், அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. இதில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story