ஊரடங்கால் மனைவி, குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை


ஊரடங்கால் மனைவி, குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2020 12:55 AM GMT (Updated: 23 Aug 2020 12:55 AM GMT)

ஊரடங்கால் மனைவி, குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தவர் ஆனந்த் (வயது 26). இவரது மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை கடலூரில் வசித்து வருகின்றனர். கடலூரில் குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில், கொரோனா தொற்றால் போக்குவரத்து இல்லாததால் மனைவி மற்றும் பிறந்த குழந்தையை நேரில் சென்று பார்க்க முடியாத சூழலில் ஆனந்த் தவித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, கவரைப்பேட்டை அடுத்த தச்சூருக்கு வந்த ஆனந்த், தடப்பெரும்பாக்கத்தில் தன்னுடன் தங்கி வேலை செய்து வரும் தந்தை விஜயிடம், மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் தான் விஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார்.

இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story