இந்து முன்னணி சார்பில் 1,500 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை மாலையில் கரைக்கப்பட்டன
திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,500 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் மாலையில் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
திருப்பூர்,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூர் மாநகரில் நேற்று இந்து முன்னணி சார்பில் தனியார் இடங்கள், வீடுகள், கோவில் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. 3 அடி முதல் 7 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. முருகனுடன் விநாயகர், லிங்க விநாயகர், மயில் வாகன விநாயகர், நர்த்தன விநாயகர், கொரோனாவை கொல்லும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. விநாயகரை வழிபடுவோம், கொரோனாவை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு பூஜை செய்து விநாயகரை வழிபட்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், கொரோனா தடுப்பு நோய் எதிர்ப்பு சக்தி ஓமியோபதி மாத்திரைகளை வழங்கினார்.
இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்திருந்தனர். அதுபோல் கோவில் வளாகத்திலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. மாநகரின் பல பகுதிகளில் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு சிலைக்கும் 5 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
1,500 சிலைகள்
அந்த பகுதியில் உள்ள மக்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர். கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. முத்தையன் நகர் பகுதியில் விநாயகர் கொரோனா வைரசை கொல்லும் வடிவத்தில் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் கூறும்போது, திருப்பூர் மாநகரம் முழுவதும் 650 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1,500 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வீடுகளிலும், தனியார் இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன என்றார்.
பின்னர் மாலையில் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள கிணறு, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி விநாயகர் சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
1,860 போலீசார் பாதுகாப்பு
இதுபோல் சிவசேனா கட்சி சார்பில் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள கட்சி அலுவலகத்தில் கருட விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்டத்தில் 40 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. பல்வேறு இந்து அமைப்பினரும் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு செய்தனர். பின்னர் மாலையில் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 960 போலீசாரும், மாவட்டத்தின் புறநகர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தலைமையில் 900 போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story