மனைவியின் நடத்தை குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரம்: நண்பரை குத்திக்கொன்ற பெயிண்டர் கைது


மனைவியின் நடத்தை குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரம்: நண்பரை குத்திக்கொன்ற பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2020 1:10 AM GMT (Updated: 2020-08-23T06:40:40+05:30)

அரும்பாக்கம் அருகே மனைவியின் நடத்தை குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த பெயிண்டர் மதுபோதையில் நண்பரை குத்திக்கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ.காலனி, முத்துமாரியம்மன் கோவில் முதல் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் தீபக் (என்ற)பஷீர்(வயது 28). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் உரிமையாளர் பஷீர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு வெளியில் ரத்தக்கறைகள் படிந்து இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார்.

இதையடுத்து அவர் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தலைமறைவாக இருந்த பஷீரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் தனது மனைவியின் நடத்தை குறித்து அவதூறாக பேசியதால் தனது நண்பரை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட பஷீர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெனாசீர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பவத்தன்று மனைவி வீட்டில் இல்லாததால், பஷீர் அவரது வீட்டில் தனது நண்பரான சைமன் என்பவருடன் மது அருந்தியுள்ளார்.

இதில் போதை தலைக்கேறியதில் சைமன், பஷீரின் மனைவி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பஷீர் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சைமன் கழுத்தில் குத்தி கொடூரமாக கொலை செய்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து ஆத்திரத்தில் கொலை செய்த பஷீர் செய்வதறியாமல் தனது வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவத்தையடுத்து பஷீரை கைது செய்த போலீசார், அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

குடிபோதையில் மனைவியை குறித்து தவறாக பேசியவரை நண்பரே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story