திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 Aug 2020 7:35 AM IST (Updated: 23 Aug 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகளில் வழிபாடு நடத்தினர்.

முருகபவனம், 

ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை பின்பற்றி நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலும் அரசு விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் பிரசித்தி பெற்ற மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

கோவில்களில்...

இதேபோல் திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் மூலவர் சுவாமி மற்றும் 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் கன்னிமூல கணபதி, ரெயிலடி சித்திவிநாயகர் கோவில், சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோவில், பழனி மலை அடிவாரம் பாதவிநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா பூஜை நடைபெற்றது. இதையொட்டி யாகம் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி ஜமுனா, மகளிர் நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் மற்றும் சப்-கோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ரவுண்ட்ரோடு கருணாநிதிகாலனி கற்பக கணபதி கோவிலில் விநாயக பெருமானுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிலைகள் கரைப்பு

இதேபோல் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் மண்ணால் செய்த விநாயகர் மற்றும் விநாயகர் படங்களுக்கு வெள்ளெருக்கு, அருகம்புல் மாலை சூட்டி தேங்காய், பழம், கொழுக்கட்டை, சுண்டல், பொரிகடலை, பழங்கள் வைத்து வழிபட்டனர்.

இதற்கிடையே அரசின் தடை உத்தரவால் பா.ஜனதா, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். அதன்படி திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து மாலையில் அந்த சிலைகள் அனைத்தையும் எடுத்து சென்று கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.

Next Story