செல்போனை திருடியதாக கூறியதால் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி; கொத்தனார் கைது


செல்போனை திருடியதாக கூறியதால் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி; கொத்தனார் கைது
x
தினத்தந்தி 23 Aug 2020 9:45 PM GMT (Updated: 2020-08-24T02:44:59+05:30)

கோட்டூர் அருகே செல்போனை திருடியதாக கூறியதால் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை கைது செய்தனர்.

கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி (வயது47). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவர் பாலையூரில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனை காணவில்லை.

அந்த செல்போன் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சுதா (30) என்பவரிடம் உத்திராபதி கேட்டார். அப்போது சுதா, தான் செல்போனை எடுக்கவில்லை என்று கூறிவிட்டார். இதை நம்பாமல் உத்திராபதி, சுதாவிடம், ‘நீ தான் எனது செல்போனை திருடினாய்’ என கூறி தொடர்ந்து திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சுதா சம்பவத்தன்று மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த சுதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் சுதா புகார் கொடுத்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்திராபதியை நேற்று கைது செய்தனர்.

Next Story