திருவண்ணாமலையில், அமெரிக்க பெண்ணை வீடுபுகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் - பொதுமக்கள் திரண்டு கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு


திருவண்ணாமலையில், அமெரிக்க பெண்ணை வீடுபுகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் - பொதுமக்கள் திரண்டு கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Aug 2020 4:21 AM IST (Updated: 24 Aug 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரை அங்கிருந்தவர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை, ஆன்மிக நகரமாகும். பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த பூமியாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவும், சுற்றிப்பார்க்கவும் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலர் வருகிறார்கள். கோவிலுக்கு ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பலரும், சாமியார்களும் திருவண்ணாமலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண், 5 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். அவர், கிரிவலப்பாதையில் அருணாச்சலாநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பகுதியில் சாமியார்கள் பலரும் தங்கி உள்ளனர். அமெரிக்க பெண்ணை, சாமியார் ஒருவர் அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளார்.

அப்போது அவர், அப்பெண்ணின் நடவடிக்கையை நோட்டமிட்டு வந்தார். தீராத ஆசையில் இருந்த அவர் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவருடன் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தலாம் என்றும், அவருடன் அமெரிக்கா சென்று விடலாம் என்றும் கனவில் மிதந்து வந்துள்ளார் இதனை தொடர்ந்து அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும், அதே நேரத்தில் அவரை அரிவாளை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் இருந்த சாமியார், தங்கத் தாலி மற்றும் ஒரு அரிவாள் ஆகியவற்றுடன் நேற்று காலை தனியாக இருந்த அமெரிக்க பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சாமியார் அமெரிக்க பெண்ணிடம் ஏதோ பேசி உள்ளார். அப்போது அவர், திடீரென அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அமெரிக்க பெண், அந்தச் சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

சாமியார் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய அவர், சாமியாரின் தலையில் அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது. அதில் அவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான போராட்டத்தில் அமெரிக்க பெண்ணும் காயம் அடைந்தார்.

கூச்சல் சத்தத்தைக் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, சாமியாரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர் தப்பியோடி விடாமல் இருக்க சாமியாரின் கைகளை பின்பக்கமாகக் கட்டிப்போட்டனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாமியாரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரின் தலையில் வெட்டுக் காயம் இருந்ததால் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த சாமியார் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் மணிகண்டன் (41) எனத் தெரிய வந்தது. சாமியார் மணிகண்டன், அமெரிக்க பெண்ணை அடிக்கடி பார்த்துள்ளார். அவர், அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். அந்தப் பெண்ணுக்கு தற்காப்பு கலைகள் தெரிந்துள்ளதால், இருவருக்கும் நடந்த தகராறில் மணிகண்டனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், எனப் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருவண்ணாமலையில் 2018-ம் ஆண்டு ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story