முழு ஊரடங்கையொட்டி அரியலூர்- பெரம்பலூரில் கடைகள் அடைப்பு


முழு ஊரடங்கையொட்டி அரியலூர்- பெரம்பலூரில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 24 Aug 2020 3:45 AM IST (Updated: 24 Aug 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் நகரில் நேற்று கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு உத்தரவின்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால் கடைவீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், முகூர்த்த தினமாக இருந்ததால் பொதுமக்களில் பலர் திருமணம், புதுமனை புகுவிழா மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்க கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் அரியலூர் மாவட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தற்காலிக காய்கறி சந்தைகளாக மாற்றப்பட்ட ஒற்றுமைதிடல், அரசு மேல்நிலைப்பள்ளி திடல் ஆகியவையும் மூடப்பட்டிருந்தது. வீதிகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகள், கிராம ஊராட்சிகள் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மூலம் அனைத்து வணிக நிறுவனங்கள், சிறுகடைகள் மற்றும் வீதிகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பெரும்பாலான பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வீடுகளில் முடங்கினர்.

Next Story