சேலம் மாவட்டத்தில், மேலும் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு - மூதாட்டி உள்பட 5 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூதாட்டி உள்பட 5 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 261 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 91 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஓமலூரில் 9 பேர், மேச்சேரியில் 2 பேர், சங்ககிரியில் 3 பேர், ஆத்தூர் நகராட்சியில் 21 பேர், ஆத்தூர் ஒன்றியத்தில் 4 பேர், கெங்கவல்லியில் 21 பேர், பனமரத்துப்பட்டியில் 4 பேர், தலைவாசலில் 17 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 29 பேர், வாழப்பாடியில் 8 பேர், வீரபாண்டியில் 7 பேர், நங்கவள்ளியில் 13 பேர், கொளத்தூரில் 2 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 4 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், மேட்டூர் நகராட்சியில் 8 பேர் மற்றும் மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், எடப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வந்த 3 பேர், சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 261 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 942 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 393 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,439 பேர் நோய் தொற்றுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதேபோல், சங்ககிரி பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும், சேலம் சாமிநாதபுரத்தை சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தனர்.
மேலும் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 72 வயதான மூதாட்டி ஒருவரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story