குன்னூர், கூடலூரில் குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


குன்னூர், கூடலூரில் குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 24 Aug 2020 4:00 AM IST (Updated: 24 Aug 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் மற்றும் கூடலூரில் குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களிலும் பலா மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பலாப்பழங்கள் பழுத்ததால் அவற்றை சாப்பிடுவதற்காக கடந்த 3 மாதங்களாக காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன.

தற்போது பலா பழ சீசன் முடிவுக்கு வந்தாலும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் அந்த பகுதிகளிலேயே முகாமிட்டு வருகின்றன. அத்துடன் சாலை ஓரத்தில் உள்ள ஆதிவாசி குடியிருப்புகளிலும் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பறா சத்திரம் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள வாழை மற்றும் பேரிக்காய் மரங்களை முறித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தினார்கள்.

அத்துடன் இந்த யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி நடமாடி வருவதால், இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அதுபோன்று கூடலூர் கெவிப்பாரா பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டுயானை நேற்று காலையில் கெவிப்பாரா அருகே உள்ள ராக்லேண்ட் தெருவுக்குள் நுழைந்தது. பின்னர் அந்த யானை தனியார் தேயிலை தோட்டத்தில் புகுந்தது.

Next Story