இருமொழி கொள்கை விவகாரம்: எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தேவையற்ற பிரசாரங்களை செய்து வருகின்றன - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
இருமொழி கொள்கை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தேவையற்ற பிரசாரங்களை செய்து வருகின்றன என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
மதுரை,
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கிச்சன் மூலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு தினமும் 1,500 நோயாளிகளுக்கு 3 வேளை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அம்மா கிச்சன் தொடங்கப்பட்டு 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் அங்கு தயாரிக்கப்படும் உணவுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஓக்கி, கஜா புயல் போன்ற எத்தனையோ இயற்கை பேரிடர்களை சந்தித்து சமாளித்து விட்டோம்.
ஆனால் இந்த கொரோனா தொற்று உலக பேரிடர். இதற்கு மருந்து இல்லை. அதற்காக தான் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளிை-யை கடைபிடித்து உணவே மருந்து என்ற முறையையும் கடைபிடித்து வருகிறோம். கொரோனா நோயாளிகளுக்கு சத்தான நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவை கொடுப்பதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைந்ததை நேரடியாக பார்க்க முடிந்தது. எனவே தான் கொரோனா நோயாளி மதுரையில் இருக்கும் வரை அம்மா கிச்சன் தொடர்ந்து செயல்படும் என்று முடிவெடுத்து இதனை நடத்தி வருகிறோம்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், முதல்-அமைச்சர் விழாவில் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து விட்டு வர வேண்டும். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கைபடி தான் தமிழக அரசு செயல்படுகிறது. அது தான் அரசின் நோக்கம் என்று அ.தி.மு.க. தொடர்ந்து கூறி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தேவையற்ற பிரசாரங்களை செய்து வருகின்றன.
இரண்டாவது தலைநகர் மதுரை என நாங்கள் எங்கள் கருத்தை தான் பதிவு செய்துள்ளோம். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.
முடிவு எடுக்க வேண்டியது தமிழக முதல்-அமைச்சர் தான். வருகிற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம். எனவே அரசின் சாதனைகள் மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம்.
தி.மு.க.வில் கடந்த பல மாதங்களாக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. ஏன் என்றால் அந்த கட்சியில் தலைவர்கள் தான் அதிகமாக உள்ளனர். தொண்டர்கள் இல்லை. அதனால் தான் அவர்களால் பொதுச் செயலாளர் பதவியை இன்னும் நிரப்பப்படவில்லை. ஆனால் அவர்கள் அ.தி.மு.க.வை பற்றி குறை கூறுகிறார்கள். இந்த கருத்தை நான் 10 மாதங்களுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். தி.மு.க.வில் ஸ்டாலினுக்கு முந்தி பிறந்த ஒருவர் மதுரையில் உள்ளார். மு.க.அழகிரியான அவர் தற்போது மவுனத்தில் உள்ளார். அவர் மவுனம் கலைத்தால் தி.மு.க.வில் பூகம்பம் வெடிக்கும் என்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், அ.தி.மு.க. பொருளாளர் அய்யப்பன், பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், பாசறை செயலாளர் ஆரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story