திருப்பூரில், குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் தொழிலதிபர்கள்
திருப்பூரில் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்கும் தொழிலதிபர்கள் மாற்றி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்,
கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தாலும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் தற்போது 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களாக கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தனியார் பள்ளிகளில் படித்து வந்த குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு மாற்றும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. திருப்பூரில் தனியார் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கல்வி கட்டணம் செலுத்திய மாணவர்கள் மட்டுமே அந்த வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர். பல மாணவர்களின் பெற்றோர் இன்னும் கட்டணம் செலுத்தாமலேயே உள்ளனர்.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்ததை தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகளில் படித்த ஏராளமான மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக சிறிய தொழிலதிபர்கள் தொழில் நசிவு, வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் படித்து வந்த தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு தொழில் அதிபர்கள் மாற்றி வருகின்றனர். இதேபோல் நடுத்தர வகுப்பை சேர்ந்த பெற்றோர் பலரும் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story