திருப்பத்தூரில் 18 வார்டுகளில், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூரில் 18 வார்டுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் சிவன் அருள் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2,560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நேற்று திருப்பத்தூர் நகராட்சியில் நாடார் தோப்பு, அனுமந்த உபயசாகர்பேட்டை, கோவிலூர் ரோடு, டபேதார் முத்துசாமி பேட்டை, லட்சுமியம்மாள் தெரு, சின்னகுளம் மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, செட்டி தெரு, புதுப்பேட்டை ரோடு, பவசநகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், அவ்வைநகர், வள்ளலார்நகர் ஆகிய 18 வார்டுகளில் உள்ள தெருக்களில் சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
சின்னகுளம் மாரியம்மன் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவன் அருள் பங்கேற்று, பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முகாம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு வார்டாக சென்று யாருக்கேனும் காய்ச்சல், இருமல் உள்ளதா? என வீடு வீடாக கேட்டும், பொதுமக்களை வரவழைத்தும் அங்கேயே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. சாதாரண காய்ச்சல், இருமல் காணப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (பொறுப்பு) அப்துல் முனிர், தாசில்தார்கள் மோகன், அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பூச்சியியல் வல்லுனர் காமராஜ், துப்புரவு ஆய்வாளர் விவேக் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும், அனைத்து இடங்களிலும் நேரில் சென்று கிருமிநாசினி தெளித்ததைக் கண்காணித்து, பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததைப் பார்வையிட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
Related Tags :
Next Story