தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முழு ஊரடங்கை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி மட்டும் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் கொரோனா அதிகரித்து வருவதாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புகார் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களை கண்காணிக்க அரசு சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
புதிய திட்டம் தொடக்கம்
வீட்டில் தலைமை படுத்தப்பட்டுள்ளோர் மருத்துவ ஆலோசனைகள் பெற தனியார் நிறுவன பங்களிப்புடன் ஒரு புதிய திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இதன்தொடக்க விழா நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் நடந்தது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவகுழுவினர்
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா அறிகுறி இருந்து மற்ற பிரச்சினைகள் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
புதுவையில் தற்போது 2,097 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களை கண்காணிக்க 12 மருத்துவ குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஊழியர்கள் நாள்தோறும் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா? சளி தொந்தரவு இருக்கிறதா? தொண்டை வறட்சி உள்ளதா? வயிற்று போக்கு உள்ளதா? என்று கேள்விகள் எழுப்புவார்கள்.
அவர்கள் அளிக்கும் தகவலின்படி உதவி தேவைப்பட்டால் மருத்துவ குழுவிற்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் அடுத்த 1 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். அப்போது அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.
முழு ஊரடங்கு
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சிலர் எதையும் பற்றி கவலைப்படாமல் வீடுகளில் இருந்து வெளியே வந்து திருமணம், துக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதாக புகார்கள் வந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது 5 நாட்களில் 100 பேருக்கு கொரோனா தொற்றை பரப்புகிறார். இவ்வாறு தான் புதுவையில் தொற்று அதிகமாக பரவுகிறது. எனவே தனிமைபடுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. நானும், அமைச்சர்களும், அதிகாரிகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
எங்களையும், அதிகாரிகளையும் குறைகூறுவதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தனிமைபடுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் புதுவையில் முழு ஊரடங்கை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story