சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை: திருப்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிரம்பி வழிந்த பொதுமக்கள் கூட்டம்


சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை: திருப்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிரம்பி வழிந்த பொதுமக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2020 3:30 AM IST (Updated: 25 Aug 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், திருப்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பத்திரங்கள், பதிவு திருமணங்கள், பத்திரங்களை குத்தகைக்கு பதிவு செய்தல், தனது சொத்தை மற்றவருக்கு தானம் கொடுத்தல், சொத்தை வேறு ஒருவருக்கு விற்க அனுமதி அளித்தல் போன்ற பணிகளுக்காக திருப்பத்தூர் தொகுதி முழுவதும் உள்ளவர்கள் தினமும் இங்கு வந்து பத்திரங்களை பதிவு செய்கிறார்கள்.

நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தின் உள்ளே மற்றும் வெளியே 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அங்கு, கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்களுக்கு சானி டைசர் வைக்கவில்லை. உள்ளே செல்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பதை அறிய உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவில்லை. சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தவில்லை என்பது உள்ளிட்ட எந்த நடைமுறைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.

திருப்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாதம் சராசரியாக 3 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இங்கு, இரு பத்திரப் பதிவு அலுவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டுமே உள்ளதால், பத்திரம் பதிவு செய்து அனுப்ப காலதாமதம் ஆகிறது. இதனால் அலுவலகத்தின் உள்ளே, வெளியே பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

எனவே உடனடியாக திருப்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூடுதல் பதிவாளரை நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பத்திரம் எழுத வருபவர்களை அருகருகே அமர வைத்து எழுதுகிறார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம் குழுக்களை அமைத்து, தினமும் பல்வேறு இடங்களில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள் கடைகளை நடத்துவதாகக் கூறி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கும் அதிகாரிகள், பத்திரப்பதிவு அலுவலகத்தில் தினமும் சமூக இடைவெளியின்றி கூடும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்? எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சாலை முழுவதும் நிறுத்துவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு கை கழுவும் திரவம் வைக்க கொண்டும், உடல் வெப்ப நிலையை அறிய தெர்மல் ஸ்கேனர் கருவியை வைக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும்.

Next Story