சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதல் - கொரோனா தொற்று பரவும் அபாயம்
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிப்காட்(ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் இருந்து பிஞ்சி செல்லும் சாலையில் (எல்.எப். ரோடு) ரேஷன் கடை எண்-2 உள்ளது. இக்கடையில் நேற்று காலை பொருட்களை எடைபோடும் நபர் வராததால், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. பின்னர் மாலை 3 மணியளவில் அரிசி வழங்கப்பட்டது. மாத கடைசியாகி விட்டதால் அரிசி கிடைக்குமா, கிடைக்காதா? எனக் கருதி ரேஷன்கடை முன்பு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவரை ஒருவர் இடித்தவாறு நின்று கொண்டிருந்தனர். அவர்களில் பலர் முகக் கவசம் அணியாமல் இருந்தனர். ரேஷன்கடை ஊழியர்களும், பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நில்லுங்கள், எனக் கூறவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இக்கடையில் முதலில் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பாமாயில், கோதுமை உள்ளிட்ட ரேஷன்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன் பிறகு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. அதேபோல், பச்சரிசியும் போதுமான அளவில் கிடைப்பதில்லை, என்று குடும்ப அட்டைதாரர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரசு வழங்கக்கூடிய அனைத்து ரேஷன் பொருட்களும் பாகுபாடு மற்றும் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக் கவசம் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் முகக் கவசம் வழங்காமல் உள்ளனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் முகக் கவசம் வழங்க வேண்டும், எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story