கும்மிடிப்பூண்டி அருகே ஆம்புலன்சில் இருந்து விழுந்த கொரோனா கவச உடையால் பொதுமக்கள் பீதி
கும்மிடிப்பூண்டி அருகே ஆம்புலன்சில் இருந்து ரோட்டில் தவறி விழுந்த கொரோனா கவச உடையை கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர். அதை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பாக தீவைத்து எரித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை வழியாக கும்மிடிப்பூண்டி நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. அந்த ஆம்புலன்சில் இருந்து கவரைப்பேட்டையில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா தற்காப்பு கவச உடைகள் சில கீழே விழுந்தன. அதனை கவனிக்காமல் ஆம்புலன்ஸ் டிரைவரும் வாகனத்தை ஓட்டி சென்று விட்டார். இதையடுத்து பயன்படுத்தபட்ட கொரோனா கவச உடைதான் ரோட்டில் விழுந்துவிட்டது என்று எண்ணிய அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
தீவைத்து எரித்தார்
இதனைக்கண்ட கவரைப்பேட்டை போலீஸ் நிலைய போலீஸ்காரர் அரிபாபு என்பவர் மேற்கண்ட கொரோனா கவச உடையை சாலையோரம் கிடத்தி பாதுகாப்பாக தீ வைத்து எரித்தார். ரோட்டில் கிடந்த கொரோனா கவச உடைகளை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பாக தீயிட்டு எரித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பின்னர் போலீசார் விசாரணையில், ஆம்புலன்சில் இருந்து ரோட்டில் கீழே விழுந்த கொரோனா கவச உடைகள் புத்தம் புதியவை என்றும் அவை பயன்பாட்டிற்காக கொண்டு செல்லும் போது தவறி ரோட்டில் விழுந்ததும் தெரியவந்தது.
Related Tags :
Next Story