சேந்தமங்கலம் அருகே பயங்கரம்: மூதாட்டி வெட்டிக்கொலை


சேந்தமங்கலம் அருகே பயங்கரம்: மூதாட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2020 4:00 AM IST (Updated: 25 Aug 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே மூதாட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேந்தமங்கலம், 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சின்னபள்ளம்பாறை ஆலமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவருடைய மனைவி பவளாயி (வயது 79). இவர்களுக்கு வசந்தா (60) என்ற மகளும், வேலுசாமி (58) என்ற மகனும் உள்ளனர். கருப்பண்ண கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் வசந்தா குடும்பத்தினருடன் நாமக்கல்லில் வசித்து வருகிறார்.

வேலுசாமிக்கு தேவிகா என்ற மனைவியும், வீரக்குமார் என்ற மகனும் உள்ளனர். வீரக்குமார் சாலை பணி ஒப்பந்ததாரராக உள்ளார். வேலுசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வேலுசாமி தனது தாயார் பவளாயியுடன் வசித்து வந்தார். இவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தாயாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவளாயி வீட்டின் வராண்டாவிலும், வேலுசாமி வீட்டுக்குள்ளும் தூங்கிக்கொண்டு இருந்தனர். திடீரென நள்ளிரவில் தனது தாயார் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக உறவினர்களுக்கு வேலுசாமி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு உறவினர்கள் விரைந்து வந்தனர். இந்த கொலை சம்பவம் பற்றி சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு சரமாரியாக வெட்டப்பட்டு கிடந்த மூதாட்டி பவளாயியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வேலுசாமியிடம் விசாரணை நடத்த போலீசார் தேடிய போது அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, வேலுசாமி மாயமானது குறித்து விசாரணை நடத்தி அவரை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பியது.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவளாயி தனது பெயரில் உள்ள 8 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பேரன் வீரக்குமார் பெயரில் எழுதி வைத்தது தெரியவந்தது. இதனால் நிலத்தை தனது பெயருக்கு எழுதாதது தொடர்பான தகராறு மற்றும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தராததால் வேலுசாமி ஆத்திரத்தில் தனது தாயாரை சரமாரியாக வெட்டிக்கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஏனெனில் சம்பவம் நடந்த இடத்தில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து விட்டு தலைமறைவானதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதன்காரணமாக தலைமறைவான வேலுசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதே நேரத்தில் பவளாயியை வேறு யாரேனும் கொலை செய்து விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த பயங்கர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story