மதுபோதையில் சாக்கடையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மதுபோதையில் சாக்கடையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை போலீஸ் எல்லைக்குட்பட்ட கோரிமேடு கூனிபஜாரை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 30). இவர், மீன்களை வெட்டிக்கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. வழக்கம்போல மதுபோதையில் கூனிபஜார் ஜெய்லானி டீக்கடை அருகே நேற்று முன்தினம் பாக்கியராஜ் தள்ளாடியபடி நடந்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள சாக்கடை வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாய்லர் ஆலை தொழிலாளி
* திருவெறும்பூரை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (40). பாய்லர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், மதுபோதையில் பாரதிபுரம் அருகே உள்ள பர்னிச்சர் கடையின் முன்பு இறந்து கிடந்தார். அவரது உடலை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஸ்ரீரங்கம் வடக்கு உள்வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(31). இவர், சுகாதார(சானிடரி) பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த சதீஷ்குமார், மோட்டார் சைக்கிளுடன் வீட்டை விட்டு வெளியேறியவர் 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அபிநயா கொடுத்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் மாயமான சதீஷ்குமாரை தேடி வருகிறார்கள்.
* செம்பட்டு குடித்தெரு ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடியதாக அப்பகுதியை சேர்ந்த சந்தானம்(58), மாணிக்கம்(49), கோவிந்தன் (52), கிருஷ்ணன்(55) மற்றும் ரஜினி(32) ஆகிய 5 பேரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மணல் கடத்தல்
* தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ், அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
* உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, பி.மேட்டூரை சேர்ந்த தேசிங்குராஜன் (27) என்பவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தபோது பிடிபட்டார்.
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
* மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கீழகண்ணுகுளம் உடையார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(30). தச்சுத் தொழிலாளியான இவரும், இவருடைய தம்பி கோபியும் கீழ கண்ணுக்குளத்திலிருந்து மண்ணச்சநல்லூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பனந்தோப்பு அருகே அவர்கள் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிவக்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோவில் வாலிபர் கைது
* துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தினேஷ் (26) என்பவரை மணப்பாறை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
* மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் வாரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
* மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக சிலர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* மணப்பாறை-விராலிமலை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் முன்பகுதியில் இருந்த சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
300 பேர் விமானத்தில் வருகை
* சிங்கப்பூர் மற்றும் அபுதாபியில் இருந்து நேற்று 300 இந்தியர்கள் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2,600 டன் உரம் திருச்சி வந்தது
* கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் உரம் நேற்று திருச்சி வந்தது. அதனை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story