அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி - போலி அதிகாரி உள்பட 3 பேர் மீது புகார்


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி - போலி அதிகாரி உள்பட 3 பேர் மீது புகார்
x
தினத்தந்தி 25 Aug 2020 11:00 AM IST (Updated: 25 Aug 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி செய்ததாக போலி போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி உள்பட 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.

மதுரை, 

மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் நேற்று சிலருடன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு திருநகரை சேர்ந்த சரோஜா என்பவர் பழக்கம். அவர் எனது மனைவிக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதற்காக மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் சக்திவேல் பாண்டியராஜ் என்பவரை சந்திக்கும்படி கூறினார். நானும் அவரை ஆரப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது சக்திவேல் பாண்டியராஜ் பலருக்கு வேலை வாங்கி கொடுத்ததாக ஆவணங்களை எடுத்து காண்பித்தார்.

அதை நம்பி நான் முதலில் ரூ.3 லட்சம் கொடுத்தேன். மேலும் அவர் ஆவின் மற்றும் மின்சார வாரியத்தில் வேலை இருப்பதாக தெரிவித்தார். அதை நம்பி பலர் பல லட்ச ரூபாயை கொடுத்தனர். மேலும் சக்திவேல்பாண்டியராஜ் தன்னை எப்போது வேண்டுமானாலும் கமிஷனர் அலுவலகத்தில் வந்து சந்திக்கலாம் என்று கூறினார். இதுதவிர கோகிலபத்மநாபன், பொன்விக்னேஷ் ஆகியோரிடம் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.

வேலைக்கான பணத்தில் 75 சதவீதம் தான் கொடுத்ததாகவும், மீதி பணத்தை உடனே கொடுக்குமாறு சரோஜா எங்களிடம் தெரிவித்தார். அதற்கு நாங்கள் வேலை கிடைத்த பிறகு மீதி பணத்தை தருவதாக கூறினோம். அதன்பிறகு சக்திவேல் பாண்டியராஜ் வேலை போட்டு தரும் அதிகாரி என்று தேவராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்து அரசு முத்திரை குத்தப்பட்ட வேலை நியமன கடிதத்தை எங்களிடம் காண்பித்தார். அதன்பின்னர் நாங்கள் அனைவரும் மீதி பணத்தையும் அவரிடம் கொடுத்தோம்.

பணத்தை வாங்கி கொண்டு அவர் குறிப்பிட்ட தேதியில் எங்களுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்த கேட்ட போது கொரோனாவால் வேலை தள்ளி போகிறது என காரணம் தெரிவித்தார். கொரோனா முடிந்து கோவில்கள் திறந்த உடன் வேலைக்கான உத்தரவு வீடு தேடி வரும் என்று கூறினார். அதன்பின்னர் வேலைக்கான உத்தரவு வரவில்லை என்பதால் நாங்கள் அனைவரும் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டோம். அதற்கு அவர் பணம் முழுவதையும் தேவராஜ் என்பவரிடம் கொடுத்து விட்டதாகவும், அவரிடம் வாங்கி தருதவாக கூறினார். மேலும் அவர் தங்களிடம் வாங்கிய பணத்திற்கு அனைவருக்கும் தனித்தனியாக அவர் வங்கி காசோலையை கொடுத்தார்.

இவ்வாறு அவர் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார்.

எனவே ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து, பணத்தை மோசடி செய்த அவர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, அது போன்ற அதிகாரி யாரும் கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.

எனவே சக்திவேல் பண்டியராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

Next Story