மேல்மலையனூர் அருகே, ஈட்டியால் குத்தி டிரைவர் கொலை - 2 மகன்களுடன் தந்தை கைது
மேல்மலையனூர் அருகே ஈட்டியால் குத்தி டிரைவரை கொலை செய்ததாக 2 மகன்களுடன் தந்தை கைது செய்யப்பட்டார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சந்திரா, வாசுகி ஆகிய 2 மனைவிகள் இருந்தனர். இதில் சந்திராவுக்கு ராமதாஸ்(48) என்ற மகனும், உமா மகேஸ்வரி(45) என்ற மகளும், வாசுகிக்கு கலைச்செல்வன்(39), கலைமணி(38) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில் ராமதாஸ், கலைச்செல்வன் ஆகிய 2 பேரும் சென்னையில் அரசு பஸ் டிரைவர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பஸ் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் அன்னமங்கலத்தில் உள்ள வீட்டிலேயே தங்கி உள்ளனர்.
இதில் ஏற்கனவே ஏழுமலை, சந்திரா ஆகியோர் இறந்து விட்டனர். அண்ணன்-தம்பிகளான ராமதாசுக்கும், கலைச்செல்வனுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைச்செல்வன் வீட்டில் கழிவறை கட்ட முயற்சித்துள்ளார். இதை ராமதாசின் தங்கை உமாமகேஸ்வரி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கடந்த 11-ந் தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வளத்தி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வன் அரிவாளால் ராமதாசை வெட்டினார். இதை தடுக்க சென்ற உறவினரான சாத்தனந்தல் கிராமத்தை சேர்ந்த சித்ரா(35), சூரியபிரகாஷ்(22) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், இவரது மகன் சூரியமூர்த்தி, 17 வயதுடைய மற்றொரு மகன் ஆகியோர் ஈட்டியால் கலைச்செல்வனின் வயிற்றில் குத்தி, கொலை செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த சூரியபிரகாஷ், சித்ரா ஆகியோரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், ராமதாஸ், கலைச்செல்வனின் தாய் வாசுகி, கலைச்செல்வன் மனைவி காயத்ரி(29), உறவினர் கண்ணன்(48) ஆகியோரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கலைச்செல்வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸ், சூரியமூர்த்தி, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
சொத்துக்காக தம்பியை ஒரு குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story