நீலகிரி மாவட்டத்தில், கேரட் சுத்திகரிப்பு எந்திர உரிமையாளர்கள் போராட்டம் - விவசாயிகள் பாதிப்பு


நீலகிரி மாவட்டத்தில், கேரட் சுத்திகரிப்பு எந்திர உரிமையாளர்கள் போராட்டம் - விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2020 11:43 AM IST (Updated: 25 Aug 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கேரட் சுத்திகரிப்பு எந்திரஉரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விளைநிலங்களில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீரில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் மூட்டைகளில் நிரப்பி சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பெரும்பாலான எந்திரங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் தண்ணீர் வெளியேற்றியதால் கால்வாய், நீரோடைகள் மாசடைந்தன.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாவட்ட நிர்வாகம் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களில் தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்ற சுத்திகரிப்பு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே சமீபத்தில் சுற்றுச்சூழல், நகராட்சியிடம் அனுமதி பெறாததாகவும் 11 எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களின் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஊட்டி, கேத்தி பாலாடா, முந்தோரை எம்.பாலாடா, நஞ்சநாடு, அனுமாபுரம் உள்ளிட்ட இடங்களில் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்கள் செயல்படவில்லை. வழக்கமாக நள்ளிரவு முதல் சரக்கு வாகனங்களில் மூட்டை, மூட்டையாக கேரட்டுகள் கழுவுவதற்காக கொண்டு வரப்படும். ஆனால், நேற்று போராட்டத்தால் கேரட்டுகள் கொண்டு வரப்படவில்லை.

இதுகுறித்து சங்க செயலாளர் ரஜினி கூறும்போது, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அறிவுரைப்படி சுத்திகரிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் பணிகள் முடிவடைந்தன. 5,000 தொழிலாளர்கள் தினமும் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்கள் மூலம் பயனடைந்து வந்தனர். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

நீலகிரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்டர் பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரட் கழுவி சுத்திகரித்து வெளியிடங்களுக்கு அனுப்ப எந்திரங்கள் அமைக்கப்பட்டன.

தற்போது கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களின் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த கேரட்டுகளை சுத்திகரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக எந்திரங்கள் வருவதற்கு முன்பாக விவசாயிகள் தங்களது நிலத்திலேயே தண்ணீர் மூலம் கேரட்டுகளை சுத்திகரித்து விற்பனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் அவர்கள் பள்ளமான இடத்தில் தார்ப்பாய் விரித்து அதில் தண்ணீர் நிரப்பி கேரட்டுகளை கழுவி வருகின்றனர். போராட்டத்தால் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பும் கேரட் அளவு குறைந்து உள்ளது.

Next Story