குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Aug 2020 6:19 AM GMT (Updated: 25 Aug 2020 6:19 AM GMT)

தேனி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தேனி,

குழந்தைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்து வழங்கும் பணி நேற்று தொடங்கியது. தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ மருந்து வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 819 இடங்கள், நகர்ப்புற பகுதிகளில் 173 இடங்கள் என மொத்தம் 992 இடங்களில் இந்த ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 165 நகர்ப்புற பகுதிகள் மற்றும் 917 ஊரகப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் பொருட்டு, மொத்தம் 1,082 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் முதற்கட்ட மருந்து வழங்கும் பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. விடுபடும் குழந்தைகளுக்கு வருகிற 29-ந்தேதி நடக்கிறது. தொடர்ந்து 2-வது கட்ட மருந்து வழங்கும் பணி வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி வரை நடக்கிறது. அதில் விடுபடும் குழந்தைகளுக்கு செப்டம்பர் 5-ந்தேதி மருந்து வழங்கப்பட உள்ளது.

6 மாதம் முதல் 1 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 1 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் மருந்து வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 44 ஆயிரத்து 308 ஆண் குழந்தைகளும், 42 ஆயிரத்து 730 பெண் குழந்தைகளும் என மொத்தம் 87 ஆயிரத்து 38 குழந்தைகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை இந்த முகாம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச்சென்று ‘வைட்டமின் ஏ’ மருந்து கொடுத்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் மற்றும் சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story