மத்திய அரசு திட்டங்களில் ‘பேக்கேஜ் டெண்டர்’ வைப்பதை ரத்து செய்ய வேண்டும் - ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


மத்திய அரசு திட்டங்களில் ‘பேக்கேஜ் டெண்டர்’ வைப்பதை ரத்து செய்ய வேண்டும் - ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 25 Aug 2020 12:15 PM IST (Updated: 25 Aug 2020 1:00 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு திட்டங்களில் ‘பேக்கேஜ் டெண்டர்’ வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் 14-வது நிதிக்குழு மானியம் ஊராட்சிகளுக்கு நேரடியாக நிதி வழங்குவது ஆகும். ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. தற்போது மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளின் ஒப்புதல் இன்றியும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்ட இயக்குனர் மூலமாக ‘பேக்கேஜ் டெண்டர்’ என்ற முறையில் ஊராட்சிகளில் ரோடுபோடுவதற்கு மட்டும் ‘டெண்டர்’ வைக்கப்படுகிறது.

‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை ரத்து செய்து ஊராட்சிகளுக்கு நிதி வழங்க வேண்டும். ஜே.ஜே.எம். திட்டத்தில் மத்திய அரசு வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கும் ‘பேக்கேஜ் டெண்டர்’ வைக்க கலெக்டர் அலுவலகத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்துக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து அதற்கான நிதியை ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஊராட்சிகள் செயல்படுத்த உத்தரவிடவேண்டும்.

ஊராட்சி தலைவர்களின் மாநில கூட்டமைப்பு சார்பில் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டதில், ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதியில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ‘பேக்கேஜ் டெண்டர்’ வைக்க அதிகாரம் இல்லை என்றும் திட்ட நிதிகளை ஊராட்சிகளே கையாள வேண்டும் என்றும், டெண்டர் வைக்க ஊராட்சிகளுக்கே அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊராட்சி தலைவர்களின் உரிமைகளை சட்டப்படி மீட்டெடுக்க கூட்டமைப்பின் மூலமாக கலெக்டர் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story