பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா - சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ.வுக்கும் வைரஸ் தொற்று


பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா - சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ.வுக்கும் வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 26 Aug 2020 3:30 AM IST (Updated: 26 Aug 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும், சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 48 மக்கள் பிரதிநிதிகள் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களையும் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு கொரோனா அறிகுறியும் இருந்தது. இதனால் டி.கே.சிவக்குமார் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். இந்த நிலையில் நேற்று டி.கே.சிவக்குமாரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டி.கே.சிவக்குமார் விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் சுதாகர், ஸ்ரீராமுலு, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி உள்பட பலர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதுபோல ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் சிவலிங்கேகவுடா. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ.வும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிவலிங்கேகவுடா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

டி.கே.சிவக்குமார், சிவலிங்கேகவுடாவுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story