கொள்ளிடம் அருகே வெடிகுண்டு வழக்கில் 2 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டவர் கைது


கொள்ளிடம் அருகே வெடிகுண்டு வழக்கில் 2 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டவர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2020 5:05 AM IST (Updated: 26 Aug 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே வெடிகுண்டு வழக்கில் 2 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.

கொள்ளிடம், 

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் பஸ் நிலையம் அருகில் கடந்த 2018-ம் ஆண்டு இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மோட்டார் சைக்கிள் நின்றதும் பின்னால் அமர்ந்திருந்த 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மட்டும் போலீசில் சிக்கினார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த கலைவாணன்(30) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 2 வெடிகுண்டுகள் இருந்தது. 2 குண்டுகளும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் ஆகும்.

2 ஆண்டுகள் தலைமறைவு

வெடிகுண்டுகளை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கலைவாணனை கைது செய்து கொள்ளிடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 வெடிகுண்டுகளையும் எருக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு பின்புறம் 200 மீட்டர் தூரத்தில் வயல் பகுதியில் பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

தப்பி ஓடியவர்கள் இருவரும் பாடலீஸ்வரன், விஜய் என்பது தெரிய வந்தது. இவர்களில் விஜயை சம்பவம் நடந்த சில தினங்களில் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரான திருவாரூர் மாவட்டம் பேரளம் திருமீயச்சூர் பகுதியை சேர்ந்த பாடலீஸ்வரன்(41) என்பவரை கொள்ளிடம் போலீசார் தேடி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடலீஸ்வரன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

கைது

இந்த நிலையில் பாடலீஸ்வரன், மங்கைநல்லூர் பகுதியில் நடமாடுவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் ஆகியோர் அங்கு சென்று பாடலீஸ்வரனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். பாடலீஸ்வரன் மீது பேரளம், சிதம்பரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

Next Story