இலந்தையடிதட்டில் அகற்றப்பட்ட இடத்தில் காமராஜர் சிலை வைக்க வேண்டும் கலெக்டரிடம், எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
நாகர்கோவில் அருகே இலந்தையடிதட்டில் அகற்றப்பட்ட இடத்திலேயே காமராஜர் சிலையை வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே இலந்தையடிதட்டில் சாலையோரம் காமராஜர் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை நேற்று முன்தினம் அரசு அதிகாரிகள் அகற்றினர். இதனை கண்டித்து இலந்தையடித்தட்டு ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலந்தையடித்தட்டு பகுதியில் அகற்றப்பட்ட காமராஜர் சிலையை மீண்டும் வைக்கக்கோரி ஊர்மக்கள் சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.
வலியுறுத்தல்
இதனைதொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்த எம்.எல்.ஏ.க்கள், இலந்தையடித்தட்டில் காமராஜர் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் சிலையை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை கூட்டாக வலியுறுத்தினர். மேலும் இதுதொடர்பாக ஆலோசனை நடந்தது.
அப்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறுகையில், ‘காமராஜர் சிலை அகற்றப்பட்டது குறித்து வருவாய்த்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அந்த இடத்தில் சிலை அமைப்பது குறித்து ஆய்வு செய்வார்கள். மேலும் அங்கு சிலை அமைப்பதன் மூலம் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படுமா? என்பது போன்றவற்றை ஆராய்ந்து ஒரு அறிக்கை தயார் செய்யப்படும். அதனை தமிழக அரசுக்கு நான் அனுப்பி வைப்பேன். இதையடுத்து மீண்டும் அங்கு சிலை அமைப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இதற்கான நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ளப்படும்‘ என்றார்.
நாடார் அமைப்புகள் கண்டனம்
இதற்கிடையே பெருந்தலைவர் மக்கள் கட்சி குமரி கிழக்கு மாவட்ட தலைவர் அன்புகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், இலந்தையடிதட்டில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் முழு உருவ சிலை அகற்றப்பட்டதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. சிலையை முன்பு இருந்ததுபோல் அதே இடத்தில் மீண்டும் அமைக்க வேண்டும். இல்லையெனில் குமரி மாவட்டம் முழுவதும் கொதித்தெழுந்து போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
காமராஜர் சிலை அகற்றப்பட்டதற்கு பல்வேறு நாடார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் காமராஜர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் நிறுவ வேண்டும் எனவும், இல்லை எனில் பல போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் நாடார் மகாஜன சங்க துணை தலைவர் சுரேந்திரகுமார், குமரி மாவட்ட நாடார் மக்கள் மன்ற செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பனங்காட்டு படை கட்சி, சான்றோர் நாடார் சங்கம், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் உள்ளிட்ட நாடார் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சி
சிலை அகற்றப்பட்டது குறித்து தகவல் அறிந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் அங்கு விரைந்து சென்று, காமராஜர் சிலை சாக்கால் சுற்றுப்பட்டு இருந்ததை பார்த்தார். அங்குள்ள மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து, காமராஜர் சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது ஒன்றிய செயலாளர் சுதன், மாநகர செயலாளர் பி.எஸ்.கே.குமார், மாவட்ட பிரதிநிதி பி.ஏ.மைக்கேல்ராஜ், தொண்டரணி செயலாளர் சசிக்குமார், பேச்சாளர் மாணிக்கம், வார்டு செயலாளர் ராபின் மற்றும் பாபு, சுரேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story