தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல் புதுச்சேரி வெறிச்சோடியது கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன


தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல் புதுச்சேரி வெறிச்சோடியது கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 26 Aug 2020 5:49 AM IST (Updated: 26 Aug 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் வெறிச்சோடின.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு வேகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 300 பேருக்கும் குறையாமல் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கக்கூட வழியில்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களைவிட வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகத்தைப்போல் வாரத்தில் ஒரு நாள் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த பேரிடர் மேலாண்மை குழுவில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின்படி புதுவை, காரைக்காலில் 2-வது வாரமாக நேற்று செவ்வாய்க் கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைபெற்றது. இதன் காரணமாக புதுவையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக புதுவை பெரிய மார்க்கெட், பஸ் நிலையங்களில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், நேரு வீதி, அண்ணாசாலை, காந்தி வீதி, மிஷன் வீதி, காமராஜ் சாலை, 100 அடி ரோடு உள்ளிட்ட புதுவையில் உள்ள அனைத்து வணிக தலங்களும் மூடியே இருந்தன.

புதுவை பகுதியில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. மருந்து மற்றும் பால் கடைகள் மட்டுமே இயங்கின.

புதுவை எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. தமிழக பகுதிகளில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் எல்லைப்பகுதிகளான கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு நுழைவு வாயில் பகுதிகளில் திருப்பி அனுப்பப்பட்டன. மருத்துவ காரணங்களுக்காக வந்தவர்கள் மட்டும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

புதுவை நகரப்பகுதிக்குள்ளும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கின்போது தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். மக்கள் நடமாட்டமில்லாதால் புதுச்சேரி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை நகர பகுதியில் தனது காரில் சென்று பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கின்றார்களா? என ஆய்வு செய்தார்.

இதற்காக எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் ரோடு, 100 அடி ரோடு, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ரெட்டியார்பாளையம், மூலக்குளம், மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக கனகசெட்டிகுளம் பகுதிக்கு சென்றார்.

அங்கு மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியை அவர் பார்வையிட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம், எந்தந்த வாகனங்களை அனுமதிக்கிறீர்கள் என்று கேட்டு அறிந்தார். அப்போது அங்கு வாகனத்தில் வந்த பொதுமக்களிடம் இன்று(நேற்று) புதுவையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய பணிக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும், அவ்வாறு வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

பின்னர் முத்தியால்பேட்டை வழியாக வீடு திரும்பினார். அவர் சென்ற வழியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஊரடங்கு உத்தரவை மீறி யாராவது அத்தியாவசிய தேவை இல்லாமல் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

Next Story