அவினாசி, பல்லடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதை கைவிடக்கோரி அவினாசி, பல்லடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அவினாசி,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் அவினாசி வட்டார கிளை சார்பில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடந்தது. அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்த உள்ளிருப்பு போராட்டம் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்தத்தை கைவிட வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட 4 ஊழியர்களின் மாவட்ட மாறுதலை ரத்து செய்ய வேண்டும். இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்க வேண்டும். உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அவினாசி ஒன்றியத்தை சேர்ந்த 31 ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரன் உள்ளிட்ட அலுவலர்கள் 40 பேர் உள்பட மொத்தம் 71 பேர் கலந்துகொண்டனர்.
பல்லடம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ரமேஷ்குமார், பல்லடம் கிளை நிர்வாகிகள் காந்திராஜ், ஆறுமுகம், பிரபுசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் உள்பட 54 பேர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story