விவசாயிகள் திட்டத்தில் முறைகேடு: வேளாண்மை அதிகாரிகள் உள்பட 20 பேர் பணியிடை நீக்கம்


விவசாயிகள் திட்டத்தில் முறைகேடு: வேளாண்மை அதிகாரிகள் உள்பட 20 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2020 2:22 AM GMT (Updated: 26 Aug 2020 2:22 AM GMT)

விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் உள்பட 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி, 

பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தகுதி உடைய விவசாயிகளிடம் சிட்டா மற்றும் ஆதார் எண், வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களை வருவாய்த்துறையினர், பேரிடர் மேலாண்மைத்துறையினர் சேகரித்து திட்டத்தில் இணைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இத்திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கும் பணி வேளாண்மை துறைக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள், தகுதி உள்ள விவசாயிகளை கிசான் சம்மன் நிதி திட்டத்தில் சேர்த்து வந்தனர். ஆனால் இந்த திட்டத்தில் விவசாயிகள் இல்லாதவர்களையும் சேர்த்து பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தக்கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின.

37 ஆயிரம் பேர் போலியாக விண்ணப்பித்தனர்

இந்த முறைகேடு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சென்னையில் இருந்து வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், வேளாண்மை கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்டத்திலும், மற்றொரு குழுவினர் விழுப்புரம் மாவட்டத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தபோது 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலியாக விண்ணப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடலூர் குறுவட்ட பகுதியில் மட்டும் போலியாக விண்ணப்பித்து இருந்த 300 பேரது வங்கி கணக்கில் தலா ரூ.4 ஆயிரம் செலுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணினி மையத்துக்கு ‘சீல்’

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம் ஆகிய பகுதியில் உள்ள கணினி மையங்கள், வேளாண்மை அலுவலகங்களிலும் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள கணினி மையத்தில் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் அரசு பயன்படுத்தும் கடவுச்சொல், பயனர் குறியீடு போன்றவை பயன்படுத்தி விவசாயிகள் அல்லாதவரை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கணினி மையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

அதேபோல் ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோடு, தியாகதுருகம் வேளாண்மைத்துறை அலுவலகம் மற்றும் தனியார் கணினி மையத்தில் மேற்கொண்ட விசாரணையில் வேளாண்மை துறையினர் பயன்படுத்தும் கடவுச்சொல், பயனர் குறியீடு போன்றவை வெளி நபர்களுக்கு சென்றது மற்றும் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது.

20 பேர் பணியிடை நீக்கம்

இந்த முறைகேட்டில் பகண்டை கூட்டுரோடு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் அமுதா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இவர்களை தவிர ரிஷிவந்தியம், தியாகதுருகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த அட்மா திட்ட அலுவலர்கள் 6 பேர், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் 6 பேர், கணினி தொழில்நுட்ப வல்லுனர்கள் 6 பேர் என 18 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எத்தனை பேர் போலியாக விண்ணப்பித்து நிதி உதவி பெற்றார்கள்?, எவ்வளவு தொகை மோசடி நடந்துள்ளது? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் திட்டத்தில் நடந்த இந்த முறைகேடு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(பாக்ஸ்)வல்லத்திலும் அதிகாரி பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டத்திலும் விவசாயிகள் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை விசாரணை நடத்திய வேளாண்மை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். முதற்கட்டமாக வல்லம் ஒன்றிய உதவி வேளாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் எவ்வளவு நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது? போலியாக எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளார்கள்? என்பது குறித்து வேளாண்மைத்துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து விசாரித்து வருகிறோம். ஓரிரு நாட்களில் விவரம் முழுமையாக தெரியவரும் என்றார்.

Next Story