ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.6¼ கோடியில் பூங்கா அமைக்கும் பணி கனிமொழி எம்.பி. ஆய்வு


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.6¼ கோடியில் பூங்கா அமைக்கும் பணி கனிமொழி எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2020 4:15 AM IST (Updated: 26 Aug 2020 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.6¼ கோடியில் 4 பூங்காக்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. பாளையங்கோட்டை ரோட்டில் ரூ.6 கோடியே 28 லட்சம் செலவில் போக்குவரத்து பூங்கா, 2 அறிவியல் பூங்காக்கள், பரிணாம வளர்ச்சியை விளக்கும் பூங்கா ஆகிய 4 பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஸ்டேட் வங்கி காலனியில் வடிகால் வசதி, மீளவிட்டான் சாலையில் வடிகால் அமைக் கும் பணி, அண்ணாநகர்-வி.வி.டி. மெயின்ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி என்ஜினீயர் சேர்மகனி, உதவி ஆணையர்கள் சரவணன், பிரின்ஸ், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் மழைக்காலங்களில் தொடர்ந்து மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படும் பூங்கா எந்த அளவுக்கு பணிகள் முடிந்து உள்ளன, பசுமை பூங்காவாக உருவாக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தேன். அதே போன்று ஸ்மார்ட் ரோடு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக சிறிது காலம் பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளேன். அந்த பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும்.

தூத்துக்குடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. நிச்சயமாக இதற்கு விரைவில் விடிவு காலம் வரும். தேர்தல் வந்த பிறகு, தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும், தூத்துக்குடி மக்களின் அடிப்படை தேவைகளை எல்லாம் நிறைவேற்றி தருவார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story