ஆலங்குளத்தில் மனைவியை குத்திக்கொன்ற பழ வியாபாரி கைது - பரபரப்பு வாக்குமூலம்


ஆலங்குளத்தில் மனைவியை குத்திக்கொன்ற பழ வியாபாரி கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 27 Aug 2020 4:30 AM IST (Updated: 27 Aug 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் மனைவியை குத்திக்கொன்ற பழ வியாபாரி கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் நாட்டார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46). கொத்தனாரான இவர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், முருகனுக்கும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த சித்ராவுக்கும் (36) இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து முருகன் 2-வதாக சித்ராவை திருமணம் செய்து கொண்டார். சித்ராவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில், அவர் 3-வதாக முருகனை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2-வது கணவர் மூலம் ஒரு மகள், மகன் உள்ளனர். அவர்களும் சித்ராவுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் முருகன் மீது சித்ரா ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். இதுதொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் முருகன், சித்ரா ஆகியோரை ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த முருகன் திடீரென்று சித்ராவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

கைதான முருகன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நான் தினமும் கொத்தனார் வேலைக்கு சென்றவுடன், மனைவி சித்ரா பழவியாபாரத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டேன். இதுதொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் சித்ரா ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் என் மீது புகார் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். அதன்படி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, கத்தியை மறைத்து எடுத்து வந்தேன். விசாரணை முடிந்து வெளியே வந்தவுடன், சித்ராவை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் முருகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் முருகனை போலீசார் ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story