விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப கணவர் மறுப்பு; பெண் தற்கொலை சிந்தாமணி டவுனில் சோகம்


விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப கணவர் மறுப்பு; பெண் தற்கொலை சிந்தாமணி டவுனில் சோகம்
x
தினத்தந்தி 27 Aug 2020 4:30 AM IST (Updated: 27 Aug 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப கணவர் மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சிக்பள்ளாப்பூர்,

பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கமேஷ். இவர் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் உள்ள கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிங்கம்மா(வயது 38). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளுடன் சிந்தாமணி டவுன் பிரபாகர் பூங்கா பகுதியில் வாடகை வீட்டில் சங்கமேஷ் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களாக சங்கமேசுக்கும், நிங்கம்மாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட பாகல்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம் என்று நிங்கம்மா, சங்கமேசை அழைத்து உள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் நிங்கம்மா, குழந்தைகளுடன் பாகல்கோட்டைக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் நிங்கம்மாவையும் பாகல்கோட்டைக்கு செல்ல கூடாது என்று சங்கமேஷ் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் நிங்கம்மா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கமேஷ், சிந்தாமணி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாமணி டவுன் போலீசார் நிங்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் விநாயகர் சதுர்த்தியை பண்டிகையை கொண்டாட பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப கணவர் மறுத்ததால் நிங்கம்மா தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிந்தாமணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story