மாணவியை பள்ளி நிர்வாகம் மிரட்டியதாக புகார் ‘கழிவறையை சுத்தம் செய்தால்தான் சான்றிதழ் தருவோம்’


மாணவியை பள்ளி நிர்வாகம் மிரட்டியதாக புகார் ‘கழிவறையை சுத்தம் செய்தால்தான் சான்றிதழ் தருவோம்’
x
தினத்தந்தி 27 Aug 2020 6:29 AM IST (Updated: 27 Aug 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் தெலுங்கு மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லாததால், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் தமிழில் மட்டும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளியில் தெலுங்கு மொழியை முதல் மொழியாக படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இரு தினங்களுக்கு முன்பு தனது மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வாங்க பள்ளிக்கு சென்றார். மாணவியின் தந்தை கொடிவலசை ஊராட்சியில் ஊழியராகவும், தாய் இதே பள்ளியில் துப்புரவு பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையே தாய் உடல்நல குறைவால் 2 நாட்களாக வேலைக்கு செல்லாததால் சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வந்த மாணவியிடம், பள்ளி நிர்வாகத்தினர் கழிப்பறையை சுத்தம் செய்தால் சான்றிதழ் தருவதாக மாணவியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி தனது தந்தையிடம் பள்ளியில் நடந்ததை கண்ணீருடன் கூறினார். அவரது தந்தை உடனே திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மனிடம் சென்று சிபாரிசு கடிதம் வாங்கி பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்துள்ளார்.

ஆனால் நிர்வாகத்தினர் அந்த கடிதத்தை வாங்க மறுத்து, மாணவி கழிப்பறையை சுத்தம் செய்தால் மட்டுமே சான்றிதழ் தருவதாக கூறியதாக மாணவி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story