மாவட்டத்தில், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு ‘சீல்’ - கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிதி நிறுவன அதிபர்கள் மற்றும் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர், நிதி நிறுவனங்களை நல்லபடியாக நடத்த வேண்டுமென்றால் மிரட்டும் பாணியில் கடனை வசூலிக்க கூடாது. சட்டத்தின் அடிப்படையில் பணத்தை வசூலிக்க வேண்டும். முதலில் நோட்டீஸ் அனுப்பி தவணை செலுத்தாவிட்டால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதிநிறுவனங்கள் கடினமான முறையினை பின்பற்றி, நெருக்கடி கொடுத்து வசூல் செய்வதாக செய்திகள் வெளியாகின. கடன் வாங்கியவர்கள் முறையாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முறையான நோட்டீஸ் அனுப்பி கடனை வசூலிக்க வேண்டும்.
மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் கடனை செலுத்த தவறுபவர்களிடம் சட்டத்தின் படி வசூல் செய்ய வேண்டும். அதை விடுத்து மிரட்டல் விடுப்பது, ஆட்களை ஏவி வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் நிதி நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் ‘சீல்’ வைக்கப்படும். கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், நிதி நிறுவனங்களை ஏமாற்றுவோர் மீதும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த தம்பதியரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து உதவிகள் வழங்கினேன். அந்த தம்பதியின் இரு குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று கொள்வதாக அமைச்சர்கள் கூறி உள்ளனர்.
நமது மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 33 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர். இதில் 30 பேர் கொரோனாவுடன் இதர நோய்களால் பாதிப்படைந்து உயிரிழந்து உள்ளனர். கொரோனாவால் மட்டும் உயிரிழந்தவர்கள் 3 பேர் ஆவார்கள். காலதாமதமாக சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் 20 பேர்.
கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்வதற்காக நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் பி.சி.ஆர். மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 800 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story