பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள 17-ஆ குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் பணியை புறக்கணித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்களது பணியை புறக்கணித்து அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளான நேற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை பிரிவு, தேர்தல் அலுவலக பிரிவு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 79 பெண்கள் உள்பட 191 பேர் பங்கேற்றதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் மரியதாஸ், செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதேபோல, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 2-வது நாளாக நேற்றும் கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story