ஸ்ரீரங்கத்தில் மு.க.ஸ்டாலின் படத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீரங்கத்தில் மு.க.ஸ்டாலின் படத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
வருமான வரி வரம்புக்குள் வராத குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்கவேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், ரூ.600 கூலியும் வழங்கவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தேசம் காக்கும் போராட்டம் என்ற பெயரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் வேளாங்கண்ணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய பதாகையை பிடித்து இருந்தனர். அந்த பதாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.
இதுபோல் மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஷாஜகான், பாலு ஆகியோர் தலைமை தாங்கினர். இதேபோல் பாரதியார் நகர், கரட்டுப்பட்டி, செவலூர் பிரிவு சாலை, புத்தாநத்தம் கடைவீதி ஆகிய பகுதிகளும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல், கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை அத்யாவசிய பட்டியலில் இருந்து நீக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், உணவு தானியங்களை மாநிலம் விட்டு மாநிலம் கட்டுப்பாடுகள் இன்றி கொண்டு செல்லும் சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு புதிய அவசர சட்டத்தை கண்டிப்பதோடு, புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story