திருப்பத்தூரில் ரூ.125 கோடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் 15 நாட்களில் முடிந்துவிடும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்


திருப்பத்தூரில் ரூ.125 கோடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் 15 நாட்களில் முடிந்துவிடும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2020 3:30 AM IST (Updated: 27 Aug 2020 9:32 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் ரூ.125 கோடியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் 15 நாட்களில் முடிவந்து விடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.125 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கி செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நகராட்சியில் பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் சாலைகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தெருக்களில் புதைக்கப்பட்ட குழாய்களில் இணைக்கும் பணி திருப்பத்தூர் ஜார்ஜ் பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள் நடைபெற்று வந்தது.

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் மற்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர் என்றபோதிலும் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது.

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாடு ‘ஜல் ஜீவன்’ திட்ட இயக்குனரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனருமான டாக்டர் சி.என்.மகேஸ்வரன் திருப்பத்தூர் நேரடியாக வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் சிவன்அருள் உடன் ஜார்ஜ் பேட்டையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

பின்னர் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன், கலெக்டர் சிவன்அருள் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிப்பது குறித்தும், கிராம ஊராட்சிகளில் குடிநீர் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேஷ்பாபு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அருண், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாபு, செயற்பொறியாளர்கள் ராம்சேகர், நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கும் திட்டத்தில் சில இடர்பாடுகள் இருந்தது பாதாள சாக்கடை பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 15 நாட்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவதும் முடிவடைந்து விடும். 10 ஆயிரத்து 930 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. வார்டுகளில் உள்ள சாலைகளை தார் சாலையாக மாற்ற நகராட்சி நிதி நிலைமைக்கு ஏற்ப முக்கிய இடங்களில் தார் சாலைகள் போடப்படும்.

ஆசிரியர் நகர், பாய்ச்சல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த கட்டமாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளது. கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு வெங்களாபுரம் அருகே உள்ள மேம்பாலம் இணைப்பு பகுதியில் கலந்து அங்கிருந்த ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாற்றில் கலக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி செயற்பொறியாளர் செல்வராணி வெங்கட்ட விஜயன் செல்ல மாரிமுத்து உடன் இருந்தனர்.

Next Story