மதுரையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டீக்கடைக்காரர் கொலை - ஓட, ஓட விரட்டி 6 பேர் கும்பல் வெறிச்செயல்
கள்ளக்காதல் விவகாரத்தில் டீக்கடைக்காரர் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
மதுரை,
மதுரை புதூர் சூர்யாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் புதூர் பஸ் நிலையத்தில் டீக்கடை வைத்திருந்தார். நேற்று காலை இவர் கடைக்கு பால் வாங்க சூர்யாநகரில் உள்ள சக்கிலியங்குளம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பால் வாங்கிவிட்டு வந்த போது 6 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் முருகனிடம் தகராறு செய்து அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அவர்கள் முருகனின் உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முருகன் மூன்றுமாவடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் டீக்கடைக்கு தேவையான பால் வாங்க ரூ.4 லட்சம் பணம் கொடுத்திருந்தார். பால் வாங்க அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்ற போது கிருஷ்ணன் மனைவி சித்ராவுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதை அறிந்ததும் கிருஷ்ணன் மற்றும் அவரது தரப்பினர் ஆத்திரத்தில் முருகன் வீட்டை சேதப்படுத்தினார்கள். இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதற்கிடையில் கிருஷ்ணன் அவரது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின்னர் சித்ராவிற்கும் முருகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிருஷ்ணன் அவரை பழிவாங்க நினைத்தார். சம்பவத்தன்று பால் வாங்கி வந்த அவரை கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.
கள்ளக்காதல் விவகாரத்தில்தான் முருகன் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story