சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா பரவல் குறைந்து வருகிறது - அமைச்சர் பாஸ்கரன் தகவல்


சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா பரவல் குறைந்து வருகிறது - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2020 11:45 AM IST (Updated: 27 Aug 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட ஓமியோபதி மருத்துவத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஓமியோபதி மாத்திரைகள் வழங்கும் விழா சிவகங்கையில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி பிரபாகரன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கிராம ஊராட்சி தலைவர்களிடம் மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இதைமுற்றிலும் தடுக்கும் வகையிலும் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசின் மூலமாக மாவட்டத்திலுள்ள 445 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் ஆர்சனிக் ஆல்பம் ஓமியோபதி மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மத்திய ஓமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதியின் பேரில் தமிழக அரசு இலவசமாக பொதுமக்களுக்கு இதை வழங்குகிறது. தினமும் 4 மாத்திரை வீதம் 3 நாட்களுக்கு இதை உட்கொள்ளலாம். மீண்டும் 15 நாட்கள் கழித்து மறுபடியும் ஒருமுறை மூன்று நாட்கள் சாப்பிடலாம்.

கிராம ஊராட்சி தலைவர்கள் இந்த மாத்திரையை தங்கள் ஊராட்சிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் வீடு, வீடாக சென்று வழங்குவார்கள். பொதுமக்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன், ஓமியோபதி மருத்துவர்கள் எட்வர்ட், மணிமுத்து, ஜெயக்குமாரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story