கூடலூர் அருகே, அரசு பள்ளியில் பதுக்கிய ஆயுதங்கள், திருட்டு பொருட்கள் பறிமுதல் - மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை தீவிரம்
கூடலூர் அருகே அரசு பள்ளியில் பதுக்கிய ஆயுதங்கள் மற்றும் திருட்டு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே புளியம்பாராவில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிக்கூடம் மூடி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கும் முகாமாக மாற்றப்பட்டிருந்தது.
மழையின் தாக்கம் குறைந்துவிட்டதால் அரசு பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பினர். இதனால் பள்ளிக்கூடம் மீண்டும் மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடத்தில் உதவியாளராக பணியாற்றும் மோகன் என்பவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கூடத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர் பள்ளிக் கூடத்துக்கு சென்று பார்த்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் முகத்தை மூடியவாறு அங்கிருந்து வேகமாக வெளியேறினார். அப்போது தொடர்ந்து அவரை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. மேலும் அந்த ஆசாமியும் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வளாகத்தை சுற்றி வந்து பார்த்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளிக்கூட வகுப்பறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே தகவல் அறிந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் வகுப்பறைக்குள் மடிக்கணினி, மெமரி கார்டுகள், ஹெட்போன் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. இது தவிர ஒரு அட்டைப் பெட்டி முழுவதும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதை தொட ர்ந்து போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இதையொட்டி தேவாலா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிள், மற்றும் அங்கு பதுக்கி வைத்திருந்த கத்திகள், மடிக் கணினி, திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசா மியின் உருவத்தைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- அடையாளம் தெரியாத ஆசாமி அரசு பள்ளிக்கூடத்தில் யாருக்கும் தெரியாமல் தங்கியுள்ளார். அவரது உருவத்தை கொண்டு பழைய குற்றவாளியாக இருக்கலாம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கைப்பற்றபட்ட பொருட்கள் கூடலூர் பகுதியில் திருடி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story