துபாயில் இருந்து கோவைக்கு 2½ கிலோ தங்கம் கடத்தி வந்த கணவன்-மனைவி கைது - பல்லடத்தை சேர்ந்தவர்கள்
துபாயில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் 2½ கிலோ தங்கம் கடத்தி வந்த பல்லடத்தை சேர்ந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கொரோனா பரவலால் வெளிநாடுகளில் இருந்து தாய் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிப்பவர்களை இந்தியா கொண்டு வருவதற்காக மத்திய அரசு வந்தே பாரத் என்ற பெயரில் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. அதுபோன்று துபாயில் இருந்து கோவை வரும் ஒரு விமானத்தில் 46 வயது ஆண் மற்றும் 33 வயது பெண் தம்பதியினர் தங்கம் கடத்தி வருவதாக கோவையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு (டி.ஆர்.ஐ.) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை இயக்குனர் சதீஷ் தலைமையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
துபாயில் இருந்து வந்த விமானம் கோவையில் தரையிறங்கிய பின்னர் அதில் இருந்து வந்த பயணிகள் குடியேற்ற சோதனை மற்றும் கொரோனா பரிசோதனையை முடித்துக் கொண்டு வெளியே செல்ல முயற்சித்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த தம்பதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொண்டு வந்த உடமைகள் மற்றும் அவர்களை சோதனை செய்ததில் தங்கம் இல்லை என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் அதிகாரிகள் தனித்தனியே துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். இதில் கணவன்-மனைவி 2 பேரும் தங்கள் உள்ளாடையில் தங்கத்தை பசை (பேஸ்ட்) போல மாற்றி 6 பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து, கடத்தி வந்தது தெரியவந்தது. தங்கத்தை பசை போல மாற்றுவதற்கு அதனுடன் வேறு சில வேதிப்பொருட்களை கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி அவர்கள் கடத்தி வந்த 2 கிலோ 610 கிராம் எடையுள்ள தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கணவன்-மனைவி 2 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுஅதிகாரிகள் கூறியதாவது:-
துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினர் கடந்த 14 நாட்களுக்கு முன்பு கோவை வந்தனர். ஆனால் கொரோனா சோதனை விதிமுறைகளின்படி 14 நாட்கள் அவர்கள் வீடுகளில் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் தம்பதியின் முன்னிலையில் அவர்கள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கத்தை பிரித்து எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா தாக்கத்தினால் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் சுற்றிப்பார்க்க சென்றவர்கள் விமான சேவை இல்லாததால் அந்தந்த நாடுகளிலேயே சிக்கி விடுகிறார்கள். அவர்கள் கையில் உள்ள பணத்தை உணவுக்காக செலவழித்து விடுகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தாய் நாடு திரும்ப நினைக்கும்போது, விமான டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை தங்கம் கடத்தும் ஆசாமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன்படி தான் இந்த கணவன்-மனைவி 2 பேரும் கடந்த மார்ச் மாதம் துபாய் சென்றவர்கள் அங்கு இருந்து திரும்ப வருவதற்கு பணம் இல்லாததால் கடத்தல் ஆசாமிகளின் வலையில் சிக்கினார்களா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story