ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன குளங்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க ஏற்பாடு - சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு


ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன குளங்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க ஏற்பாடு - சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 28 Aug 2020 4:15 AM IST (Updated: 27 Aug 2020 11:20 PM IST)
t-max-icont-min-icon

தென்கால் பாசன குளங்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

திருச்செந்தூர்,

ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன குளங்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து முக்காணியில் நேற்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் மற்றும் மருதூர் மேலக்கால், கீழக்கால் ஆகியவற்றின் மூலம் பாசன வசதி பெறும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வழங்கும் வகையில், பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி, ஆத்தூர் அருகே முக்காணி ரவுண்டானாவில் விவசாயிகள், பொதுமக்களுடன் இணைந்து நேற்று காலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.

இதையடுத்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. உதவி கலெக்டர் தனப்பிரியா தலைமை தாங்கினார்.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 1-ந்தேதியில் இருந்து பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து, ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால், மருதூர் மேலக்கால், கீழக்கால் ஆகிய பாசன குளங்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று காலையில் நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Next Story