பெங்களூருவில் போதை மாத்திரைகளை கடத்தி விற்ற பெண் உள்பட 3 பேர் கைது - கன்னட திரையுலகினரிடம் விசாரிக்க போலீசார் முடிவு


பெங்களூருவில் போதை மாத்திரைகளை கடத்தி விற்ற பெண் உள்பட 3 பேர் கைது - கன்னட திரையுலகினரிடம் விசாரிக்க போலீசார் முடிவு
x
தினத்தந்தி 28 Aug 2020 3:45 AM IST (Updated: 28 Aug 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போதை மாத்திரைகளை கடத்தி விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களிடம் இருந்து கன்னட திரையுலகினர் போதை மாத்திரையை வாங்கி பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு கல்யாண்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவின் போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் குறிப்பிட்ட முகவரியில் உள்ள அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 145 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட 180 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த ரவீந்திரன் என்பவரை போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அனிகா, அனூப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த விவகாரத்தில் அனிகாவுக்கு கன்னட திரையுலகினர் நடிகர்கள், நடிகைகளுடன் தொடர்பு உள்ளதாகவும், திரையுலகின் நடத்தும் நிகழ்ச்சியின் போது நடிகர், நடிகைகளுக்கு அனிகா உள்பட 3 பேரும் சேர்ந்து எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை வினியோகம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி 3 பேரும் விற்பனை செய்து உள்ளனர். போதை மாத்திரைகளை வாங்கி விற்பதற்காக அனிகா ‘டார்க்வெப்‘ என்ற இணையதளத்தை பயன்படுத்தி வந்து உள்ளார். கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

அப்போது இவர்கள் 3 பேரும் சேர்ந்து நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும், அதன்மூலம் ரூ.3 கோடி வரை வருமானம் ஈட்டியதாகவும், ரவீந்திரனும், அனூப்பும் மாதத்திற்கு 2 ஆயிரம் வாடிக்கையாளர்களை பிடித்து அவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

போதை மாத்திரைகள் பெல்ஜியம், ஜெர்மனி நாடுகளில் இருந்து விமானம் மூலம் பார்சலில் தான் வந்து உள்ளதாகவும், இதனை சுங்கவரித்துறை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இந்த போதை மாத்திரை கடத்தல் விவகாரத்தில் சுங்கவரித்துறையினருக்கு தொடர்பு உள்ளதா? என்றும் சந்தேகம் எழுந்தது.

மேலும் அனிகாவிடம் இருந்து போதை மாத்திரைகளை நடிகர்கள், நடிகைகள் உள்பட கன்னட திரையுலகினர் வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுவதால், அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story