காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள மேகதாது அணை குறித்து - மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி


காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள மேகதாது அணை குறித்து - மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
x
தினத்தந்தி 28 Aug 2020 4:00 AM IST (Updated: 28 Aug 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள மேகதாது அணை குறித்து மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

ராமநகர்,

கர்நாடகத்தில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் புதிய அணை கட்ட தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் இந்த புதிய அணையை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் ராமநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து காவிரி நீர்ப்பாசன மேலாண்மை அதிகாரிகளுடன், மாவட்ட பொறுப்பு மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண் ஆலோசனை நடத்தினார். அப்போது ராமநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்களை 3 ஆண்டுகளுக்குள் முடிப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர்ப்பாசன திட்டங்கள், மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். மேகதாதுவில் அணை கட்டுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் பெங்களூரு நகரின் குடிநீர் பிரச்சினைக்கு எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது என்ற முக்கிய காரணத்திற்காக தான் மேகதாதுவில் அணைக்கட்ட மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெங்களூரு குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கும்படி மத்திய ஜலசக்தி துறைக்கு விளக்கமாக எடுத்து கூறப்படும். மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து மத்திய ஜலசக்தி மந்திரி கஜேந்திர ஜெகவத்தை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி 2 முறை சந்தித்து பேசியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் விரைவில் கர்நாடக அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்படும். கூடிய விரைவில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்காக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மேகதாதுவில் அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பீடப்பட்டுள்ளது. அங்கு அணை கட்டுவதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நதிநீரை தமிழகம்-கர்நாடகம் பங்கிட்டு கொள்ள மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story