மாவட்டத்தில், புதிதாக 136 பேர் கொரோனாவால் பாதிப்பு - 2 பேர் பலி


மாவட்டத்தில், புதிதாக 136 பேர் கொரோனாவால் பாதிப்பு - 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Aug 2020 3:15 AM IST (Updated: 28 Aug 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று மட்டும் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,654 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4,285 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 1,284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

அறந்தாங்கி அருகே சிறுகாசாவயல் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கடந்த 25-ந் தேதி, 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால், அதில் ஏற அப்பெண் மறுத்து விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த வேல்ராமன்(வயது 55), அரிச்சந்திரன்(40), இளவேந்தன்(29) ஆகியோர் சுகாதார ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோரை தரக்குறைவாக பேசி கொரோனா பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆவுடையார்கோவில் தாசில்தார் பரணி, நாகுடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், நாகுடி போலீசார், 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிமளம் ஒன்றியத்தில், கடியாபட்டி கிராமத்தை சேர்ந்த 52 வயது ஆண், அரிமளம் பேரூராட்சியை சேர்ந்த 50 வயதை கடந்த 3 ஆண்கள், 72 வயது பெண், ஏம்பல் அம்பாள்நகரில் 14 வயது சிறுவன், 25, 39 வயதுடைய ஆண்கள், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 37 வயது பெண் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முனசந்தை ஊராட்சியில் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களில் 10 நபருக்கு புதிதாக நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Next Story