மாவட்டத்தில், டாக்டர் உள்பட 84 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,821 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உள்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 1,739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தை சேர்ந்த 2 பேரின் பெயர் அந்தந்த மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,737 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று ஓ.சவுதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், மோகனூரை சேர்ந்த கால்நடை டாக்டர், திருச்செங்கோடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பட்டணம் அரசு பள்ளி ஆசிரியை, பள்ளிபாளையம் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த போலீஸ்காரர்கள், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று குமாரபாளையத்தில் 20 பேருக்கும், பள்ளிபாளையத்தில் 9 பேருக்கும், திருச்செங்கோட்டில் 8 பேருக்கும், ராசிபுரத்தில் 7 பேருக்கும், நாமக்கல்லில் 5 பேருக்கும், பரமத்திவேலூர் மற்றும் வேலகவுண்டம்பட்டியில் தலா 3 பேருக்கும் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 84 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 33 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை 1,257 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 34 பேர் உயிரிழந்த நிலையில், 530 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story