கடலூர் மாவட்டத்தில் 262 பேருக்கு தொற்று போலீஸ் ஏட்டு உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி - பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது


கடலூர் மாவட்டத்தில் 262 பேருக்கு தொற்று போலீஸ் ஏட்டு உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி - பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 28 Aug 2020 3:45 AM IST (Updated: 28 Aug 2020 8:34 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் 262 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,814 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 262 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் கடலூரை சேர்ந்த செவிலியருக்கும், சென்னை, விசாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் இருந்து கடலூர் வந்த 4 பேருக்கும், 5 கர்ப்பிணிகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,076 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் 41 வயது நபர். இவர் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதற்கிடையே அவரது உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க நீதிமன்ற ஊழியரும், கடலூர் சாவடியை சேர்ந்த 35 வயது பெண்ணும் கடலூர் அரசு மருத்துவமனையிலும், பெண்ணாடத்தை சேர்ந்த 60 வயது பெண் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். நேற்று மட்டும் 406 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 4,857 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

Next Story