கூடலூர் அருகே, காட்டு யானை தாக்கி முதியவர் பலி


கூடலூர் அருகே, காட்டு யானை தாக்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 28 Aug 2020 10:43 AM IST (Updated: 28 Aug 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார்.

கூடலூர், 

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 64). இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகள் மட்டும் உள்ளார். அவர் திருமணமாகி கூடலூரில் வசித்து வருகிறார். பழனியாண்டி தனது விவசாய நிலத்தில் சிறிய வீடு ஒன்றை கட்டி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நாய் நேற்று காலை 7 மணி அளவில் பழனியாண்டியின் விவசாய நிலம் அருகே புதர் பகுதியில் நின்று குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்றனர். அப்போது அங்கு கடும் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து பொதுமக்கள் அந்த புதர் பகுதியில் சென்று பார்த்தபோது, அங்கு அழுகிய நிலையில் பழனியாண்டியின் உடல் கிடந்தது. அவரது இடது கால் துண்டிக்கப்பட்டு காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நியூ ஹோப் போலீசார் மற்றும் ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியாக நடந்து சென்ற பழனியாண்டியை காட்டு யானை தாக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பழனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அத்துடன் இது குறித்து நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை, பழனியாண்டியின் காலை சிதைத்து சேதப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. இரவில் அங்கு வந்த வனவிலங்குகள் அந்த காலை தூக்கி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அவருடைய காலை தேடும் பணி நடந்து வருகிறது என்றனர்.

Next Story